மதுரை பாரபத்தியில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2-வது மாநில மாநாடு தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த மாநாட்டில், நாளை லட்சக்கணக்கான தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்காக விஜய் நடந்து செல்லும் ராம்ப்வாக் மேடை, பொதுமக்கள் அமரும் பகுதி, மருத்துவ வசதிகள், கழிப்பிடங்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்தும் முழு வீச்சில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு திடலை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மாநாட்டின் தொடக்க விழாவில் விஜய் ஏற்றவிருந்த சுமார் 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. கிரேனின் கயிறு கழன்றதால் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், கொடிக்கம்பம் அருகிலிருந்த ஒரு காரின் மீது விழுந்தது. நல்ல அதிர்ஷ்டமாக, காருக்குள் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. திடீர் சம்பவம் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினாலும், எந்த உயிரிழப்பும், பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவத்துக்குப் பிறகு மாநாட்டுத் திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
..