*அரங்கம் அதிரட்டுமே!* கோவையில் ரஜினியின் 75-வது பிறந்தநாள் மற்றும் 50 ஆண்டு சினிமா பங்களிப்பு விழா: கலைநிகழ்ச்சி மூலம் திரளும் நிதி ஏழை மக்களுக்கு அர்ப்பணிப்பு! நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், தமிழ் சினிமாவில் அவர் ஆற்றிய பொன்விழா (50 ஆண்டுகள்) பங்களிப்பைப் போற்றும் வகையிலும், கோவை மாவட்டம், சூலூர் நீலாம்பூரில் உள்ள ஆடிட்டோரியம் ஒன்றில் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரஜினிகாந்தின் மனைவி நடத்தும் 'பாரத் சேவை அமைப்பு' மூலம் நடத்தப்படும் இந்த நிகழ்வில், சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் வகையில், ரஜினியின் புகழ்மிக்கப் பாடல்களுக்கு நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. 'அரங்கம் அதிரட்டுமே' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில், டிக்கெட் மூலம் வரும் முழுத் தொகையும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள பாரத் சேவா அமைப்பைச் சேர்ந்த திரு. கோவிந்தராஜ், 8D மார்க்கெட்டிங் ஏஜென்சியின் நிறுவனர் திரு. விஷ்ணு வேணுகோபால் ஆகியோர் கூறுகையில் "தலைவர் ரஜினி அவர்களின் 75 ஆண்டுகால வாழ்வின் பங்களிப்பையும், 50 ஆண்டுகால கலைப் பணியையும் போற்றும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் தொகையை, தலைவர் ரஜினிகாந்தின் மனைவி அவர்கள் முன்னெடுக்கும் பாரத் சேவை அமைப்பின் வாயிலாக, முழுக்க முழுக்க ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காகப் பயன்படுத்த உள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற சமூகப் பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்த எங்கள் குழு திட்டமிட்டுள்ளது" மேலும் இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
..