சவூதி அரேபியாவின் தாயிப் (Taif) நகரில் உள்ள பிரபலமான கிரீன் மவுண்டன் பொழுதுபோக்கு பூங்காவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நேர்ந்த அதிர்ச்சிகரமான விபத்து தற்போது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்பூங்காவில் அமைந்திருந்த 360 டிகிரி சுழலும் ராட்டினம், செயல்பாட்டின் நேரத்தில் திடீரென அதன் மையத் தூண் உடைந்து விழுந்தது. இதனால், ராட்டினத்தின் இரு முனைகளும் ஒன்றோடொன்று மோதி பயணிகள் கீழே தரையில் வீழ்ந்தனர். இந்த திடீர் விபத்தால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது. விபத்து ஏற்பட்டதும், மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இதில் மொத்தம் 23 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 20 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதுடன், மூன்று பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தற்போது நடந்து வருகிறது. தற்காலிகமாக ராட்டினம் உள்ளிட்ட அனைத்து அதிரடிப் பயண வசதிகளும் பூங்காவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல். இதே நேரத்தில், இந்த சம்பவத்தின் விபரீதமான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த வீடியோவில் ராட்டினம் திடீரென கீழே விழும் அதிர்ச்சி தருணங்கள் பதிவாகி காணப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு நடவடிக்கைகளின் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவம், பொழுதுபோக்கு பூங்கைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறது.
..