கயானா: 'டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தியா சிறப்பாக செயல்பட்டு மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேற காத்திருக்கிறது. வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட 12 அணிகள் லீக் சுற்றுடன் திரும்பின. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 4 அணிகள் 'சூப்பர்-8' சுற்றுடன் வெளியேறின. இந்தியா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று கயானாவில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்காவை வீழ்த்தி 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. இதில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை வென்றது. இதுவரை தொடர்ந்து 6 போட்டியில் வென்ற இந்தியா, அரையிறுதியில் நெருக்கடி இல்லாமல் வெற்றி நடையை தொடர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (191 ரன்) நம்பிக்கை தருகிறார். இது இவரது கடைசி தொடராக இருக்கும் என நம்பப்படும் நிலையில் மீண்டும் கைகொடுக்க முயற்சிக்கலாம். துவக்கத்தில் கோலி (1, 4, 0, 24, 37, 0) மட்டும் தொடர்ந்து ஏமாற்றுகிறார். இதுவரை இத்தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ரிஷாப் பன்ட் (167), சூர்யகுமார் (149), ஹர்திக் பாண்ட்யா (116), ஷிவம் துபே (106) அசத்துகின்றனர். பவுலிங் எப்படி பவுலிங்கில் பும்ரா (11 விக்.,), அர்ஷ்தீப் சிங் (15) என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தொடரலாம். சுழலில் குல்தீப் யாதவ் (7), அக்சர் படேல் (5), ஜடேஜா (1) கூட்டணி எதிரணிக்கு தொல்லை தர உள்ளது. இவர்களுடன் 'ஆல் ரவுண்டர்' பாண்ட்யாவும் கைகொடுப்பார். பேட்டிங் பலம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, லீக் சுற்றில் தடுமாறியது (4ல் 2 வெற்றி, 1 தோல்வி). 'சூப்பர்-8' சுற்றில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்ற போதும், ஒருவழியாக அரையிறுதிக்கு முன்னேறியது. துவக்கத்தில் கேப்டன் பட்லர் (191), பில் சால்ட் (183) மிரட்டுகின்றனர். இவர்களை விரைவில் வீழ்த்த வேண்டும். பின் வரிசையில் ஹாரி புரூக் (120), பேர்ஸ்டோவ் (110) பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் ஆர்ச்சர் (9), 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்த ஜோர்டான் (7) வேகத்தில் கைகொடுக்கலாம். சுழலில் அடில் ரஷித் (9), மொயீன் அலி (3) உள்ளனர். ஆடுகளம் எப்படி கயானா ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும். கடந்த சில ஆண்டுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சராசரியாக ஒரு ஓவருக்கு 6.96 ரன் தான் விட்டுக் கொடுத்தனர். எனினும் வேகப்பந்து வீச்சாளர்களும் துவக்கத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம். அரையிறுதிக்காக ஆடுகளத்தை சிறப்பாக தயார் செய்யும் வகையில், கடந்த ஜூன் 8 க்குப் பின் இங்கு போட்டி நடக்கவில்லை. மழை வருமா கயானாவில் இன்று காலையில் மழை வரும் என்பதால், போட்டி துவங்க தாமதம் ஆகலாம். போட்டி நேரத்தில் இடியுடன் கூடிய மழைவர, அதிகபட்சம் 58 சதவீதம் வாய்ப்புள்ளது. யாருக்கு வாய்ப்பு இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிக்கு 'ரிசர்வ் டே' கிடையாது. மழையால் பாதிக்கப்பட்டால், கூடுதலாக 250 நிமிடம் (4 மணி நேரம், 10 நிமிடம்) தரப்பட்டுள்ளன. * குறைந்தபட்சம் இரு அணியும் தலா 10 ஓவர் விளையாடி இருந்தால், போட்டி முடிவு அறிவிக்கப்படும். * ஒருவேளை போட்டி ரத்தானால், 'சூப்பர்-8' சுற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற அணி அரையிறுதிக்கு செல்லும். இதன் படி 'பிரிவு 1'ல் முதலிடம் பிடித்த இந்தியா, பைனலுக்கு முன்னேறும். 'பிரிவு 2'ல் இரண்டாவது இடம் பிடித்த இங்கிலாந்து வெளியேறும். இந்தியா, இங்கிலாந்து அணிகள் 'டி-20'ல் 23 போட்டியில் மோதின. இந்தியா 12ல் வென்றது. 11ல் தோற்றது. * கடைசியாக 2022, 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா (168/6), 10 விக்கெட்டில் இங்கிலாந்திடம் (170/0) தோற்றது. இன்று வென்று இந்தியா பதிலடி தர காத்திருக்கிறது.
..