ஓணம் பண்டிகை மற்றும் மிலாது நபி விழாவை முன்னிட்டு நீண்ட விடுமுறை நாட்கள் வருவதால், தமிழக அரசு போக்குவரத்துத் துறை பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில் 2,470 சிறப்பு பேருந்துகளை இயக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ஏற்கனவே 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 710 பேருந்துகள் இன்று, 405 பேருந்துகள் நாளை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இன்று மட்டும் 710 பேருந்துகள், நாளை 405 பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து 105 பேருந்துகள் அதேபோல், கோயம்பேட்டிலிருந்து இன்றும் நாளையும் 105 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன. மாதவரம் நிலையத்திலிருந்து 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்ல 350 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திரும்ப வரும் பயணத்திற்கும் வசதி விடுமுறை நாட்கள் முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்பும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 875 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. முன்பதிவு விவரம் இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே 41,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் பண்டிகைக் கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பொதுமக்களுக்கு சிரமமின்றி வசதியான பயணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
..